ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அலுவலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கலந்துகொண்டு தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் அவர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நடு இரவில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் வந்துபோவது, பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது.
சாலைகளின் பெயரை மாற்றம் செய்யும் ஆளும் அரசு, திரும்ப ஆட்சிக்கு வர முடியாத மன நிலைமைக்கு வந்துவிட்டது. இத்தகைய செயல்களை எல்லாம் மே 3ஆம் தேதிவரை தான் அவர்களால் செய்ய முடியும்.
கரோனா பரவலுக்கு மத்திய, மாநில அரசுகள் காரணம். தடுப்பூசி வருகைக்கு பின்னர் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வரும்பொழுது, தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
அப்துல் கலாமிற்கு பிடித்த நடிகர் விவேக், சமூக அக்கறை கொண்டவராகத்தான் இருக்க முடியும். விவேக் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு இழப்பு" என்றார்.
இதையும் படிங்க: விதைக்கப்பட்டார் ஜனங்களின் கலைஞன்!