ஈரோடு மாவட்டம் ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான மான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கத்திரி வெயில் வாட்டி வதைப்பதால், வனப்பகுதியில் நீரின்றி மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த வாரம் வனப்பகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் துளிர்விட தொடங்கியுள்ளது. ஆனால், குட்டைகள் நிரம்பவில்லை. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தண்ணீர், உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன.
மேலும் யானைகள் கூட்டமாக ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டு அங்குள்ள மூங்கில் மரத்தை உடைத்து தின்று வருகிறது. ஒரு சில நேரங்களில் சாலையில் அங்கும் இங்குமாக உலா வருகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் எந்த வாகனங்களும் செல்ல முடியாததால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபிறகே அந்த இடத்தை விட்டு வாகனங்கள் நகர முடிகிறது. எனவே ஆசனூர் அருகே உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.