சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன. இந்நிலையில் அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் நீர்வரத்து குறித்த கணக்கெடுப்பதற்கு பொதுப்பணித்துறை பணியாளர்கள் பழத்தோட்டம் வழியாக, 24 மணி நேரமும் செல்ல வேண்டியுள்ளது. மேலும் பழத்தோட்டத்து நுழைவுவாயிலில் இரவு நேர காவல் பணியில் பணியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் பழத்தோட்டத்துப் பகுதியின் முகப்பு சுவரை உடைத்து தள்ளியது. இதைப் பார்த்து யானையை விரட்ட முயன்ற பணியாளரை, அந்த யானை துரத்தியது. இரவுநேரத்தில் யானைகள் நடமாட்டத்தால் அணையில் நீர் வரத்து கணக்கீடு எடுக்கச் செல்லும் பணியாளர்கள், யானைகளின் அச்சுறுத்தலால் பணிக்குச் செல்லத் தயங்குகின்றனர்.
மேலும் பழத்தோட்டத்தில் இருந்து அணைப்பூங்காவுக்குள் நுழைந்த யானைகள், அங்கிருந்த மரங்களை முறித்து சேதப்படுத்தியது. அதுபோல தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி, நாசப்படுத்தியதோடு, அங்கிருந்த இரும்பு நுழைவுவாயிலை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிங்கார வடிவேலு, வனத்துறையிடம் அளித்தப் புகாரின்பேரில் வனத்துறையினர் யானைகளைக் கட்டுப்படுத்த கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வாத்தை கவ்விச் சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சி