ஈரோடு: பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் குடிநீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் கரையை ஒட்டிய பகுதியில் முகாமிட்டன. கரைப்பகுதியில் நன்கு வளர்ந்த புற்களை தனது தும்பிக்கையால் பறித்து உட்கொண்ட காட்டு யானைகள் ஜாலியாக விளையாடி மகிழ்ந்தன. காட்டு யானைகள் அணையின் கரைப்பகுதியில் முகாமிட்டுள்ளதை கண்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
அரை மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்டு தீவனம் உட்கொண்ட காட்டு யானைகள் பின்னர் தனது குட்டிகளுடன் அப்பகுதியில் உள்ள முட்புதர் காட்டிற்குள் சென்று மறைந்தன. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பவானிசாகர் அணையின் கரையில் நடமாடும் காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள முட்புதர் காட்டில் முகாமிடுவதால் பவானிசாகர் அணை மற்றும் கரைப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் மற்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பண்டிகை விடுமுறைகளால் சென்னையில் அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்