ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம் பீக்கிரிபாளையம் வனப்பகுதியில், கோம்பை மாதேஸ்வரர் கோயில் மற்றும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோம்பை பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்குச் செல்வது வழக்கம். சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம், ராமபையலூர், பீக்கிரிபாளையம், இக்கரை நெகமம் புதூர், காடகநல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களே இங்கு வழிபாட்டுக்கு செல்வர்.
யானை அகழிகள் மூடல்
இந்நிலையில் இன்று (அக்.16) புரட்டாசி மாத ஐந்தாவது சனிக்கிழமையையொட்டி கோம்பை பெருமாள் கோயிலுக்கு வாகனங்களில் சென்று வர பொதுமக்கள், வனத்துறையினரிடம் அனுமதி கேட்டனர். வனத்துறையினரோ வனப்பகுதிக்குள் டிராக்டர், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பீக்கிரிபாளையம் வன எல்லையில் வனத்துறையினரிடம் வாகனங்களில் வனக்கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறை அலுவலர்களிடம், பொதுமக்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக ஓரிரு பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் வராமல் இருக்க வெட்டப்பட்ட அகழியை மூடி பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அகழியை மீறி சென்ற 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அம்மா உணவகத்தை மூட திட்டம்? - வெடிக்கும் போராட்டம்