ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே இலவச மின்சார உரிமை கூட்டியக்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து இயக்கத்தை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம் தொடக்கிவைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020' நாட்டின் வேளாண் உற்பத்திக்கு எதிராகவும், மின்விளக்கு வசதி பெற்றுள்ள ஏழைகளுக்கு எதிராகவும் உள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு அளிக்கப்படும் சலுகை கிடைக்காது என்பதால் இந்தச் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் இலவச மின்சாரம் தொடர்வதற்கான மத்திய, மாநில அரசுகளின் உத்திரவாதத்தை வலியுறுத்தியும் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்தில், சத்தியமங்கலம் பகுதியில் 50 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பப்படும்" என்றார்.