ஈரோடு: தமிழ்நாடு கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மைசூர் ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன. ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி 16.2 டன்னுக்கு குறைவாக பாரம் ஏற்றி வாகனங்கள் மட்டுமே ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கர்நாடகத்தில் இருந்து 16.2 டன்னுக்கு அதிகமாக மக்காச்சோளம் பாரம் ஏற்றி வந்த 10 சக்கர லாரிகளை வனத்துறையினர் காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் இன்று (டிச. 19) தடுத்து நிறுத்தினர். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந்ததால் 5 மக்காசோளம் பாரம் ஏற்றி வந்த லாரிகளை திருப்பி அனுப்பினர். இதற்கு ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓட்டுநர்கள் போராட்டம் காரணமாக அடர்ந்த வனப்பகுதியில் அரசு பேருந்துகள், கரும்பு லாரிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன. சாலையோரம் முகாமிட்டிருந்த ஆண் யானை கரும்பை சுவைக்க வந்தது. அப்போது எந்தவித அச்சமும் இன்றி யானையுடன் ஓட்டுநர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர்.
அங்கு வந்த ஆசனூர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் யானையை காட்டுக்குள் விரட்டினார். போராட்டம் குறித்து ஆசனூர் வனச்சரக அலுவலர் சிவக்குமாரிடம் கேட்போது, சில நாள்களுக்கு முன்பு கர்நாடகத்தில் இருந்து வந்த சரக்கு லாரி நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்ததால் ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை அனுமதிப்பதில்லை என்றார்.
ஓட்டுநர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரியில் கூடுதலாக இருந்த மக்காச்சோளத்தை மற்றொரு லாரியில் ஏற்றி செல்வதாக உறுதியளித்ததையடுத்து, லாரி காரப்பள்ளம் சோதனைச்சாவடி வழியாக செல்ல வனத்துறையினர் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் போல் நடித்து ரூ.29 லட்சம் பறிப்பு - கள்ள நோட்டு கும்பல் கைது