ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள காளி திம்பம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சேகரம், மானாவாரி போன்ற வனப்பொருள்களை பயிர்செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.
அடர்ந்த காட்டுப் பகுதியான இக்கிராமத்தில் காட்டு யானைகள், பன்றிகள், காட்டெருமை போன்ற போன்ற வன விலங்குகள் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதமாக்கி வருகின்றன.
கல்வி பெற சிரமத்தை சந்திக்கும் மாணவர்கள்
இக்கிராமத்தில் வாழும் குழந்தைகள் ஆரம்பக் கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை பயில ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில்தான் தங்கி படிக்க வேண்டும். தற்சமயம் கரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் வீடு திரும்பிய குழந்தைகள் படித்த படிப்பை மறந்து பெற்றோருடன் ஆடு, மாடு மேய்க்க வனத்திற்குள் சென்று வருகின்றனர். இதனால் பள்ளிகளில் பயின்ற இக்குழந்தைகள், கல்வியை மறக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
முனைவர் பட்டம் பெற்ற மாணவர்
இதே கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞர், சிறு வயது முதல் அரசு தரும் பழங்குடியினர் சலுகைகளைக் கொண்டு பள்ளி, கல்லூரி எனப் படித்து இயற்பியலில் பிஎச்டி முடித்து முனைவராகியுள்ளார். சத்தியமூர்த்தி இதே கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான கவுசல்யா என்னும் பெண்ணை திருமணம் செய்து சொந்த கிராமத்திலேயே வசித்து வருகிறார்.
இதனையடுத்து தங்களது கிராமத்துக் குழந்தைகள் கல்வியை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்தத் தம்பதியினர் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். காளி திம்பம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் காலை, மாலை என கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பாடம் நடத்தி வருகின்றனர்.
சிறப்பு வகுப்பு எடுக்கும் தம்பதி
கவுசல்யா, மாணவ, மாணவிகளுக்கு ஆரம்பக் கல்வியும் சத்தியமூர்த்தி, ஆங்கிலம், கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கற்பித்து வருகிறார். இவர்களது இந்தச் செயலை அந்த கிராம மக்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி - கவுசல்யா தம்பதியினர் கூறுகையில், ”எங்களது பெற்றோர் படிக்காதவர்கள். அவர்கள் எங்களை சிரமப்பட்டு படிக்க வைத்தார்கள். அதன் பயனாக நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம். கல்வி மட்டுமே சமூக மாற்றத்தை உருவாக்கும்.
இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகிறோம். எங்களைத் தொடர்ந்து இங்கு பயிலும் மாணவர்கள் வருங்கால தலைமுறையினருக்கு பாடம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் வசதி இல்லை... மலை வாழ் கிராம மூதாட்டி உயிரிழந்த சோகம்