ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறையேனும் குடிநீர் விநியோகம் செய்யப்படவேண்டும். குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்த வேண்டும், சாலைகளில் குடிநீர் மற்றும் புதைவழி மின் தடத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உனடியாக மூடி சாலையை மேம்படுத்தவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அப்போது நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் நகராட்சி நிர்வாகம் தனது பணிகளை முறையாக செய்வதில்லை என்றும் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சீரமைக்காததினால் நாள்தோறும் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். சீரான குடிநீர் விநியோகம், முறையான குப்பை அகற்றம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கோரிக்கைவிடுத்தனர். முறையான நடவடிக்கை இல்லையெனில், நாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.