ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்தப் பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதே போன்று, ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளிலும் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (டிச.16) காலை சிவகிரி பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வடமாநிலத் தொழிலாளி ஒருவரின் சடலம், கழிவுநீர் கால்வாயில் இருந்துள்ளது.
இதனைக் கண்ட அப்பகுதியில் இருந்த மக்கள், சிவகிரி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தூய்மைப் பணியாளர்களின் உதவியோடு வடமாநிலத் தொழிலாளியின் சடலத்தை மீட்டனர்.
அதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதன் மூலமாக மீட்கப்பட்ட வடமாநிலத் தொழிலாளியின் உடலை, சிவகிரி போலீசார் உடற்கூறு ஆய்விற்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வட மாநிலத் தொழிலாளி அப்பகுதியில் நடந்து சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. நடந்து சென்ற வட மாநித்ல தொழிலாளி பெயர், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாத நிலையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் சிவகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சாலையில் நடந்து சென்ற வடமாநிலத் தொழிலாளி ஒருவர் சிறிது நேரத்தில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் குடிப்பதற்கு மது தரமறுத்த நண்பரை கட்டையால் தாக்கிய நபர் கைது!