ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகைப் பூ, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா, மும்பை, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் பறிக்கப்பட்ட 10 டன் மல்லிகை பூ விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தன. நேற்று (ஏப்ரல் 24) மல்லிகை பூ கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று பூக்களை வாங்க ஆள் இல்லாததால், அதனை கோவை மாவட்டம் காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
ஒரு கிலோ மல்லிகை பூவைப் பறிப்பதற்கு ரூபாய் 60 முதல் 75 வரை செலவான நிலையில், பூ பறிக்கும் கூலிக்குக்கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முழு ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சத்தியமங்கலம் பகுதியில் மல்லியை பயிரிட்ட விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.
ஏற்கனவே, திருமண மண்டபம், கோயிகளுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் பூக்கள் விற்பனை குறைந்த நிலையில், முழு ஊரடங்கில் முற்றிலும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.