சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் பழங்குடியினர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். அங்கிருக்கும் பெரும்பாலான கிராம மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதியில் விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ராமசாமி என்பவரின் மாடு, ஆசனூர் மைசூர் சாலையில் திறந்தவெளி தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்தது.
இதைக்கண்டு பதற்றம் அடைந்த ராமசாமி தண்ணீர் தொட்டியில் விழுந்த மாட்டைக் காப்பாற்ற முடியாமல் கதறி அழுதுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் ராமசாமிக்குத் தைரியம் கொடுத்தனர். இதன் பின்னர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜான்சன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த மாட்டைக் கயிறு மூலம் கட்டி பத்திரமாக மீட்டனர்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.