ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
இதையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்த நபர்களுக்குச் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் அப்பெண்ணின் மகனுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இவரது மகன் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், வழக்கம்போல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து, மாணவன் படிக்கும் வகுப்பறையில் உள்ள 27 மாணவர்களுக்கும், 42 ஆசிரியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அனைத்து மாணவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பள்ளிக்கு நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. மாணவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதால், கரோனா பரிசோதனை முடிவுக்கு பிறகே கோயில்கள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் , "பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்குத் தொற்று பரவிவிடவில்லை.
ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இருந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரேநாளில் 330 பேர் மரணம்