ஈரோடு மாவட்டம், பெருந்துறை சானிடோரியத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று (ஆக்.17) தனது இருசக்கர வாகனத்தை பெருந்துறை பேருந்து நிலையம் அருகே நிறுத்தி விட்டு பணிக்குச் சென்றார்.
பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் தமிழ்செல்வன் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன வாகனத்தைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
பேருந்து நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, அதில் ஒரு பெண்ணும், ஆணும் இருசக்கர சக்கர வாகனத்தை லாவகமாக எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. இக்காட்சி பதிவுகளை கொண்டு இருசக்கர வாகனம் திருடிய தம்பதியினரைத் காவல்துறையினர் தேடி வந்தனர்.
விசாரணையில், சிசிடிவியில் பதிவான இருவரும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று இருவரையும் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், அப்துல் ரஹ்மான், அவரது மனைவி பர்வீனா ஆகிய இருவரும் இணைந்து இருசக்கர வாகனத்தைத் திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, திருடி வைத்திருந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: கத்தியை காட்டி பணம் பறிக்க முயற்சி - மூவர் கைது!