கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அனைவரும் தனிமைப்படுத்துதல் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை பின்பற்றி சத்தியமங்கலத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கெளரிசங்கருக்கும் மைசூரைச் சேர்ந்த சங்கீதாவுக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இன்று (மார்ச் 30ஆம் தேதி) திருமணம் நடத்த பண்ணாரிஅம்மன் கோயிலில் அனுமதி பெறப்பட்டிருந்தது. தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக 30 பேருக்கு மேல் திருமண விழாவில் கலந்துகொள்ளக்கூடாது என்ற அரசு உத்தரவை பின்பற்றி எளிய முறையில் பண்ணாரிஅம்மன் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று மணமகள் சங்கீதா, அவர் குடும்பத்தினர் சத்தியமங்கலம் வந்தனர். கோயில் வளாகத்தில் பெரியோர் முன்னிலையில் மணமகள் கழுத்தில் மணமகன் கெளரி சங்கர் தாலி கட்டினார்.
எளிய முறையில் நடந்த இந்த திருமண விழாவில் இரு வீட்டார் சார்பில் 22 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் மணமக்கள், உறவினர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து நோய் தொற்று பரவுதலை தடுக்கும் அரசின் உத்தரவை பின்பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினர்.