ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே குரும்பபாளையம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பு.புளியம்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட மதுவிலக்கு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது குரும்பபாளையம் புளுஸ்டார் கிரஷர் அருகிலுள்ள முட்புதரில் இரண்டு பேர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். , காவல் துறையினரின் வருகையை அறிந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மற்றொருவரை பிடித்து விசாரித்தபோது அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி (35)என்பது தெரிய வந்தது.
அவரை கைது செய்த காவல் துறையினர், 50 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர். சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட கருப்புசாமியை சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.மேலும், தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.