ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிமுக 7 பேரும் திமுக கூட்டணி 6 பேரும் கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று பவானி சாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான்காவது ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் சரோஜா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
அப்போது திமுக கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்கள் தங்களுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டி ஒன்றிய அலுவலக வாயிலில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஏழு மாதங்களில் தங்கள் வார்டுகளில் அடிப்படை வசதி எதுவும் செய்து தரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவுவாயில் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி, ஒன்றியக் குழு உறுப்பினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தரம் 10 நாட்களுக்குள் நிதி ஒதுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.