தமிழ்நாடு கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப்ப் பரவிவருகிறது. இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாம்ராஜ் மாவட்டத்தையொட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதியான தாளவாடியில் கர்நாடக வாகன ஓட்டிகள் நுழைவதால் நோய்த் தொற்று பரவும் என முன்னெச்சரிக்கை காரணமாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறை தீவிர தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்களில் இ-பாஸ் இருப்பவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து ராமபுரம், பிசில்வாடி, அருள்வாடி, எத்திக்கட்டை, குமிட்டாரம் ஆகிய இரு மாநில இணைப்பு சாலைகளை தகர சீட்டுகளால் அடைத்தனர். தாளவாடிக்கு காய்கறி வாகனங்கள் செல்வதற்கு மட்டும் பாரதிபுரம் வழித்தடத்தில் அனுமதிக்கப்படுகிறது. தாளவாடியில் இருந்து தேங்காய் தொழிலாளர்கள், கர்நாடக மாநில கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே காலை முதல் மதியம் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இருப்பினும் தாளவாடியில் ஒரே நாளில் 54 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். தாளவாடியில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள ஈரோட்டுக்கு கரோனா நோயாளிகள் செல்வதில் சிரமம் ஏற்படுவதால் தற்காலிகமாகப் படுக்கைகளுடன் கூடிய கரோனா சென்டர் திறக்கப்பட வேண்டும் எனத் தாளவாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் எனும் நான்: மகிழ்ச்சிக் கடலில் அண்ணா அறிவாலயம்