ஈரோடு: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்துவருகிறது.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு என்பது 29 ஆயிரத்தைக் நெருங்கிய நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மற்ற மாநிலங்களைவிட மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதால், அண்டை மாநிலங்கள் எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றன.
இதனிடையே, தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. சத்தியமங்கலம் பகுதியில் நாள்தோறும் பல பேர் தொற்றால் பாதிக்கப்படுவதால் சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் தொற்றுத் தன்மையை ஆராய்ந்து சிகிச்சை அளிக்க காவல் நிலையம் எதிரிலுள்ள நகராட்சி அரசுப் பள்ளியில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குச் சிறப்பு மருத்துவர் தலைமையில் ரத்தப் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு, மார்புச் சளி ஆகியவற்றை ஆய்வுசெய்து வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு ஆலோசனை வழங்கி மருந்துகள் அளிக்கப்படுகின்றன.
மேலும் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களை நாள்தோறும் கண்காணிக்க மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் நாள்தோறும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர தொற்றால் பாதிக்கப்படுவோர் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க 30 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் பூஸ்டர், தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4465 ஆகவும் நேற்றைய பாதிப்பு 919 ஆக உள்ளது.
ஏற்கனவே கரோனா காரணமாக மாநில அரசு வார இறுதி ஊரடங்கு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த நடிகைக்கு கரோனா!