ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 பேரில் 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நான்கு பேர் மட்டுமே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்று ஏற்பட்ட நபர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என ஆயிரத்து 690 பேர் கண்டறியப்பட்டு அவர்களிடம் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியதில் 1400 பேருக்கு தொற்று இல்லை என ஆய்வறிக்கை வரப்பெற்றுள்ளது.
மீதமுள்ளவர்களின் ஆய்வு முடிவுகள் வரவில்லை. கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட காய்கறி சந்தைகளுக்கு வருகின்றன. இதனால், தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிறகு அனுமதிக்கப்படுகின்றன.
இந்த சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த காவல் துறையினர், மருத்துவக்குழுவினர் ஆகியோரிடம் சரக்கு லாரிகளின் மீது கிருமி நாசினி தெளித்து, ஓட்டுநருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:மருத்துவர் சைமனுக்கு மாணவர்கள் அஞ்சலி