பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணியானது 1948ஆம் ஆண்டு தொடங்கி 1955ஆம் ஆண்டு நிறைவுற்றது. அப்போது கட்டுமானப் பொருள்கள் எடுத்துச் செல்வதற்கு, ஆற்றின் குறுக்கே பவானி ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, தரைப்பகுதி சேதமடைந்ததால் வாகனப்போக்குவரத்து தடைபட்டது. அதனைத் தொடர்ந்து பழுதடைந்த பாலத்திற்கு அருகே புதிய பாலம் கட்ட ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகள் தொடங்கியது.
மேலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டியதால் எந்தநேரமும் பவானிஆற்றில் வெள்ளம் திறந்துவிடப்படும் என்பதால், கட்டுமானப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பாலம் கட்டும் பணி மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
தற்போது மத்திய அரசு பொது ஊரடங்கில் சில பணிகளுக்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பாலம் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. இதற்கான கட்டுமானப்பணி பொக்லைன், ஜேசிபி இயந்திரம் மூலம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற வேண்டும்'-மேலாண் இயக்குநர் குமரகுருபரன்!