நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் வரும் ஜூலை 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் இம்மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, நாளை (முதல் ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவுள்ளது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் முழுவதும் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு நாளை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ”அரசின் உத்தரவை ஏற்று வியாபார நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுப்பு அளித்திட வேண்டும். முழு ஊரடங்கு உத்தரவை வியாபாரிகளும், பொதுமக்களும் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஒத்துழைத்திட வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வெகுவாகக் குறைந்திருந்த கரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த 25ஆம் தேதி முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.