ஈரோடு: குடியிருப்பில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் ரசாயனம் கலந்த நீர், நுரை பொங்கி வருவதால் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி 39 வார்டு பகுதிக்கு உட்பட்ட, கே.எஸ் நகர் மரப்பாலம் 5 வது வீதியில் உள்ள கோபால் என்பவரது குடியிருப்பில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் (போர்வெல்) இருந்து குடிப்பதற்கு மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்த போர் போட்ட நிலையில், குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் ரசாயன கழிவு நீர் வருவதை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் நுரையுடன் வெளியேறி அந்த வீதியில் சோப்பு நுரை போல் பொங்கி வீதியில் வழிந்து ஓடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “ இந்த பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி சார்பில் ஆற்று நீர் விநியோகம் தடைபடும் நேரங்களில், போர்வெல் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இந்த பகுதியில் உள்ள சில ஆழ்துளைக் கிணற்றில் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வருகிறது.
இதையும் படிங்க: குன்னூர் - மேட்டுபாளையம் மலை ரயில் சேவை 2வது நாளாக ரத்து! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
இது குறித்து பலமுறை மாநகராட்சி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித ஆய்வுகள் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட சாய சலவை ஆலைகள் செயல்படுகின்றன. அந்த ஆலைகளில் கழிவு முறையாக சுத்திகரிப்பு செய்யாமல், கழிவு நீர் நிலத்தடி மூலம் வெளியேற்ற படுகிறதா என்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் பொதுமக்கள் புற்றுநோய், தோல் அரிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் சந்திக்க நேரிடும். இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆழ்துளைக் கிணற்றில் ரசாயனம் கலந்த நீர் நுரையுடன் பொங்கி வரும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினர்.
இதையும் படிங்க: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை இயங்குகின்றன! நவ.10ம் திறந்து இருக்கும் எனத் தகவல்!