தமிழ்நாட்டில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் விவசாயம் சார்ந்த தொழில் ஈடுபட்டுவருகின்றனர். இப்பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இங்குக் கோழி நிறுவனங்களிடமிருந்து குஞ்சு, தீவனம் ஆகியவற்றைப் பெற்றுக் கறிக் கோழிகளை 40 முதல் 50 நாள்கள் வளர்த்து கொடுக்கின்றனர். இதற்கு வளர்ப்பு தொகையாகக் கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் 6 வரை மட்டுமே விவசாயிகளுக்கு நிறுவனங்கள் வழங்குகின்றனர். இந்தத் தொகை போதவில்லை என்று 2010ஆம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தி கிலோ ஒன்றுக்கு ரூ4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தித் தந்ததாகவும் 2013 ஆம் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட எந்த சரத்துக்களையும் கடந்த ஏழு வருடங்களாகக் கோழி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் கோழி வளர்ப்பு செலவுகள் பல மடங்கு உயர்ந்துவிட்டது, இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ.3.50 முதல் 6 வரை மட்டுமே வழங்கப்படுவதால் கோழிப்பண்ணையைத் தொடர்ந்து நடத்து முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கோழி வளர்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 11 ஆம் தேதி கோழி நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததால், இனி கோழிப்பண்ணை நடத்தி வருவாய் இழப்பைச் சந்திக்கமுடியாது. இதற்குத் தீர்வு காணும் வரை பண்ணையாளர்கள் கோழி நிறுவனங்களிடமிருந்து குஞ்சுகளைப் பெற்று வளர்க்கப்போவதில்லை என 11ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்துவிட்டாதாக தவறான தகவல்கள் வெளியாகிவருகிறது. இது வரை எவ்வித முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. கூலி உயர்வு கேட்டு நடைபெற்று வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை நீத்துப்போகச்செய்யும் வகையில் கார்ப்பரேட் கோழி நிறுவனங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இதனைக் கண்டித்து வரும் 21 ஆம் தேதி பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஓ.வி. மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், கோழி வளர்ப்புக்குக் கிலோ ஒன்றுக்கு ரூ.12 வழங்கும் வரை வேலை நிறத்துப்போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.