ஈரோடு: பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம், பெரும்பாலானோர் நோன்பு இருந்து சைவ உணவுகளைச் சாப்பிடுவது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.
புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் இன்று (அக்.18) தொடங்கியுள்ளது. ஒருமாதமாக சைவ உணவு மட்டுமே உண்டதால், அசைவ உணவு சாப்பிட மக்கள் தயாராகியுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் புதிதாகப் பிரியாணி கடை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா என்பதால் வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக ரூ.70-க்கு ஒரு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒன்று வாங்கினால், மற்றொன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.
இதனால் மக்கள் கூட்டம் கடை முன் குவிந்தனர்.
வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் கடையைப் பூட்டி விட்டு மற்றொரு வழியாக பிரியாணி விநியோகிக்கப்பட்டது. கடும் கூட்டம் காரணமாக பண்ணாரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு பிரியாணி பார்சல்... படையெடுத்த மக்கள்!