ஈரோடு: தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப். 19ஆம் தேதி நடைபெற்றது. இன்று (பிப். 22) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், 11ஆவது வார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் பதிவாகின. திமுக வேட்பாளர் உமாசங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம் 35 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர். பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கு மட்டுமே பெற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 15 வார்டுகளில் 14இல் திமுக வேட்பாளர்களும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ள நிலையில், பவானிசாகர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.