ஈரோடு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செப்டம்பர் மாதம் ஐரோப்பிய பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டம் ஒருங்கிணைத்த இணைய வழி கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசினார். அதில், மனு நூலில் பெண்கள் குறித்து கூறப்பட்டுள்ள சில கருத்துகளை மேற்கோள்காட்டி பெண்களை மனு நூல் இழிவுபடுத்துவதாக பேசியிருந்தார்.
அந்த வீடியோ கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வந்தது. இதைத்தொடர்ந்து மனு நூலை தடை செய்யக்கோரி இன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் இன்று ஈரோடு சூரம்பட்டி வலசுப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமாவளவன் பெண்களை மிகவும் இழிவுபடுத்தி பேசியதாக கூறிய போராட்டக்காரர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, திருமாவளவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்றும் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மனுஸ்மிருதி விவகாரம்: திருமாவளவனுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க. ஸ்டாலின்!