சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூரிலிருந்து 20 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மாக்கம்பாளையம் வனக்கிராமத்துக்குச் செல்ல வேண்டுமெனில் 5 பள்ளங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்துக்கு ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. அவசர மற்றும் பிற தேவைகளுக்கு மக்கள் இருசக்கர வாகனத்தை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று மாக்கம்பாளையம் பகுதியில் மழை பெய்ததால் மலை அருவிகளில் இருந்து வந்த வெள்ளநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து போலிப்பள்ளத்தில் சென்றது. இதனால் போலிப்பள்ளத்தில் செந்நிறவெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மாக்கம்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்ல வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் போலிப்பள்ளத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை பார்த்து சாலையை கடக்க முடியாமல் தவித்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பின் வெள்ளம் வடிந்தபிறகு இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தைக் கடக்க முயன்றனர். நீரின் வேகம் காரணமாக இரு சக்கர வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது.
அப்போது உடன்வந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இரு சக்கர வாகனத்தை தள்ளியபடி கரைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர். இதுபோன்று அருகியம், குரும்பூர் பள்ளத்தில் வெள்ளநீர் செல்வதால் கடம்பூர் - மாக்கம்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க குரும்பூர், அருகியம், போலிபள்ளத்தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு