ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் முழுஅளவு நீர்மட்டம் 105 அடி, அதாவது 32.8 டிஎம்சி கொள்ளளவாகும். இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பவானி ஆற்றிலும் மாயாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 94.26 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு ஐயாயிரத்து 566 கனஅடி நீர் வருகிறது. இதனால் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு ஆயிரத்து 300 கனஅடி நீரும் தடப்பள்ளி அரக்கன்கோட்டைக்கு ஆற்று மதகு மூலம் ஆயிரத்து 200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீர் இருப்பு 24.46 டிஎம்சியாக உள்ளது.
தற்போது, பவானிசாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சாரல் மழை பெய்துவருவதாலும் மாயாற்றிலிருந்து மூன்றாயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டிருப்பதாலும் அணைக்கு நீர்வரத்து ஐந்தாயிரம் கனஅடியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.