ஈரோடு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட கொள்ளளவு 105 அடி. இதன் நீர் இருப்பு 32.8 டிஎம்சி ஆக உள்ளது. இந்நிலையில்,மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி, கேரளா எல்லையில் பெய்த தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், பில்லூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்வரத்து கடந்த 7 நாட்களில் 15 அடி வரை உயர்ந்து அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
1956ஆம் ஆண்டு முதல் பவானிசாகர் அணை 26 முறை 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடிப்பதால் ஓரிரு நாட்களில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானிசாகர் ஆற்று மதகு மூலம் திறந்துவிடப்படும்.
இதனால் கரையோர பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே வாய்க்கால் பாசனத்துக்காக திறக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.