ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப் பூங்கா உள்ளது. இங்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வது வழக்கம்.
பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இந்தப் பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சிறுவர் ரயில், கொலம்பஸ், சறுக்கு விளையாட்டு, அழகான புல்தரைகள், விதவிதமான மலர்ச் செடிகள், காளை மாடு, பட்டாம்பூச்சி, மீன் உள்ளிட்டவைகளின் தத்ரூபமான சிலைகள் உள்ளன.
தினமும் பார்வையாளர்கள் பூங்காவில் அனுமதிக்கப்படும் நிலையில் கரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பூங்கா மூடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொழுதுபோக்கு பூங்காக்கள், ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணைப் பூங்கா, வரும் டிசம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டு, முகக்கசவம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் எனப் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தற்போது பூங்காவில் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதோடு, பூங்காவை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.