ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் சாகர் அணையை ஒட்டி பவானிசாகர் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்தப் பேரூராட்சியில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, பொதுசுகாதாரம், தூய்மைப்பணிகள், மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.
இதனால் சிறந்த பேரூராட்சிகளைத் தேர்வு செய்யும் குழுவினர் இப்பேரூராட்சியை ஆய்வு செய்தனர். இதையடுத்து ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாட்டில் உள்ள 527 பேரூராட்சிகளில் மூன்று பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள், விருதுகள் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்குவது வழக்கம்.
அதன்படி இன்று சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் சிறந்த பேரூராட்சிகளாக மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி ஆகிய மூன்று பேரூராட்சிகள் தேர்வாகியுள்ளது. இதில் பவானிசாகர் பேரூராட்சிக்கு மூன்றாம் பரிசும், அதற்கான விருதினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேருராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் வழங்கினார்.
இதையறிந்த பவானிசாகர் பேரூராட்சி ஊழியர்க்ள், மகிழ்ச்சி தெரிவித்ததோடு சிறந்த பேரூராட்சியாகத் தேர்வு செய்த தமிழ்நாடு அரசுக்கும், விருது வழங்கிய முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பால் இந்த விருது கிடைத்திருப்பதாக பெருமிதத்துடன் கூறினர்.