ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. இந்த அணை மூலம் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர்.
இந்தாண்டு பருவமழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள் அளவை எட்டியது. பாசனத்துக்குப் போதுமான நீர் இருப்பு அணையில் உள்ளதால் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் உள்ள ஒற்றைப்படை மதகு பாசனப்பகுதிகளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 9ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஜனவரி 9 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் 12 டிஎம்சிக்கு மிகாமல் கடலை, எள் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 9ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது நேற்று இரவுடன் நிறுத்தப்பட்டது.
எட்டு முதல் பத்து நாள்களில் இரண்டாம் சுற்றுக்குத் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டமானது 102 அடியாகவும், நீர்வரத்து ஆயிரத்து 287 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 150 கன அடியாகவும் உள்ளது.
இதையும் படிங்க: 'குடிக்கத் தண்ணீர் இல்லை... தண்ணீர் கேட்டா அசிங்கமா திட்டுறாங்க'