மத்திய ஆயுர்வேத அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகம், ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு படித்தவர்களும் அனைத்து வகை அறுவை சிகிச்சைகளையும் செய்யலாம் என்றும், ஆயுர்வேத மருத்துவம் பயின்ற மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான உயர்மட்ட மேல்படிப்புக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா முழுவதுமுள்ள ஆங்கில மருத்துவ முறை மருத்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்திய மருத்துவச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.என். ராஜா கூறுகையில், "இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா போன்ற மருத்துவ முறைகளுக்கு இந்திய மருத்துவச் சங்கத்தினரோ ஆங்கில மருத்துவர்களோ எதிரானவர்கள் அல்ல.
அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சைகளை வழங்கி குணப்படுத்த வேண்டுமென்பதுதான் அனைவரது விருப்பமும் நோக்கமுமாக உள்ளது.
மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம் மருத்துவப் படிப்பு பயின்றவர்களும் அறுவை சிகிச்சை வழங்கலாம் என்று அறிவித்திருப்பது ஆங்கில முறை மருத்துவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நோயாளிகளும் கடும் குழப்பமடைவார்கள், மத்திய அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. ஆங்கில மருத்துவ முறையில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகளை செய்து அனைத்துத் தகுதிகளையும் பெற்ற பிறகே சிகிச்சை வழங்குகின்றனர்.
ஆங்கில மருத்துவ முறையால் மட்டுமே செய்யப்பட வேண்டிய, செய்ய முடிகிற சிகிச்சைகள், இதுபோன்ற அறிவிப்பு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.
வருகின்ற 29ஆம் தேதி இந்திய மருத்துவர் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டமும், மாநில செயற்குழுக் கூட்டமும் கூடி அது எடுக்கும் முடிவின்படி மத்திய அமைச்சகத்தின் அறிவிப்பைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: நிவர் புயல் பாதிப்பு: நிவாரண உதவி வழங்கிய ஸ்டாலின்