ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பவளக்குட்டை வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வந்த 3 வயதுள்ள பெண்யானைக் குட்டி ஊருக்குள் புகுந்தது. குட்டியை பார்த்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் யானைக்குட்டியை மீட்டு மீண்டும் அதே பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் விட்டனர். குட்டியானைக்கு வழி தெரியாமல் ஆசனூர் கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்து குட்டியை மீண்டும் மீட்டு பவானிசாகர் காராட்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் வைத்து டாக்டர் அசோகன் தலைமையில் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், குட்டியை தாயிடம் சேர்ப்பதற்கு தனி வாகனத்தில் குட்டியை ஏற்றிக்கொண்டு பண்ணாரி பேலாரி வனத்தில் தாய் யானைக்காக வனத்துறையினர் காத்திருந்தனர். தாய் யானை குறைந்தது ஒரு நாளைக்கு 50 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதால் கடம்பூர அடிவாரம் பகுதியான பேலாரிக்கு தாய்யானை வர வாய்ப்புள்ளது என கருதிய வனத்துறையினர், கடந்த இரு நாட்களாக குட்டியுடன் அங்கே காத்திருந்தனர்.
வாகனத்தில் குட்டியை வைத்து மரத்தில் பரண் அமைத்து வனத்துறையினர் யானை கூட்டத்தைக் கண்காணித்து வந்தனர். இதுவரை தாய்யானை வராத காரணத்தால் மற்றொரு யானை கூட்டத்தில் குட்டியை சேர்க்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானை கூட்டத்தில் குட்டியை சேர்க்காத நிலையில், வண்டலூர் அல்லது முதுமலைக்கு குட்டி அழைத்துச் செல்லப்படும் என வனத்துறையினர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: 65 வயது யானைக்கு ராணுவ பாதுகாப்பு... ஏன் தெரியுமா?