ஈரோடு: ஆசிய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் மாவட்டம் ஈரோடு. இந்த மாவட்டத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அப்துல் கனி ஜவுளி சந்தையில் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரம் தோறும் நடைபெறும் ஜவுளி சந்தையில் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.
இந்த நிலையிலேயே அப்துல் கனி ஜவுளி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுவருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதோடு அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று கடைகள் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாற்று இடம் அல்லது கடை ஒதுக்காமலேயே கடைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அலுவர்கள் மிரட்டல் விடுத்துவருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் முறையாக கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன்பின்பே பழைய கடைகளை அகற்ற வேண்டும். இல்லையேல் வியாபாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - கே.என்.நேரு