ஈரோடு: தமிழ்நாட்டில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பாஜக சார்பில் அந்தியூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்பு அங்கிருந்து மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாமரைகரை பகுதிக்கு அவர் சென்றார்.
அங்கு மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மழையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்து மழையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி நபர் ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்து முறையிட்டார்.
பதிலுக்கு அவரது காலில் விழுந்து தனது தோளில் சாய்த்து அண்ணாமலை ஆறுதல் கூறினார். இனி வரும் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி சாப்பிட்டார். பின்பு அங்கே உள்ள மலைவாழ் மக்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
இதையும் படிங்க: “ஈபிஎஸ் செயல்திறன் பற்றி ஒரே மேடையில் விவாதிக்க தயார்” - ஜெயக்குமார்