ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதீத வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று புலிகள் காப்பகம், ஆசனூர், மைசூர் தேசிய நெடுங்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டன. அதேபோல் தாளவாடி, அரேபாளையம், கல்மண்டிபுரம், திகனாரை, எரகஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
அதேபோல் கிருஷ்ணாபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம் இருந்த மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில், உடனடியாக மின் வினியோகத்தை சீரமைக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.