சென்னை: கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மரண தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.
இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதனை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராதாகிருஷ்ணனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராதாகிருஷ்ணன் ஆளுநரிடம் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் பரிசீலனை செய்ய உத்தரவிடுமாறு மனுத் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் வழக்கு: பன்னீர்செல்வம் தரப்பிடமும் கருத்து கேட்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு!
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், கருணை மனு மீது ஏற்கனவே குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஆளுனரிடம் அளித்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், குடியரசுத் தலைவர் ஏற்கனவே முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில் மனுதாரர் வேண்டுமானால் மீண்டும் குடியரசுத் தலைவரை அணுகலாம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.