ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தில் மார்ச் 1ஆம் தேதியன்று அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக கிராமத்தின் நடுவே குடியிருப்புப் பகுதிக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட மேடையில், கூட்டம் சேர்ப்பதற்காக நடனக்கலைஞர்களின் குத்தாட்டம் நேற்று மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
அதிக சத்தத்துடன் வைக்கப்பட்ட ஒலிபெருக்கியால் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்குப் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இரவு 8 மணியளவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் மேடைக்கு வரும்வரை குத்தாட்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நீடித்தது.
தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற குத்தாட்ட நடனம், பொதுக்கூட்ட நிகழ்ச்சியால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அதிக இரைச்சலுடன் குத்தாட்டம் போட்டதால் அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயார் ஈஸ்வரி என்பவர் ஒலிபெருக்கியின் சத்தத்தைக் குறைக்க வலியுறுத்தியும் அவர்கள் மறுத்துள்ளனர்.
மேலும், தனது கணவர் செல்வன் உடல்நலக்குறைவால் படுத்தப்படுக்கையாக உள்ளார். மகள் தேர்வுக்குப் படித்துவருகிறாள். இதுபோன்ற பொதுக்கூட்டத்தால் தனது மகள் படிப்பு பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ’தமிழ் தேர்வு எளிதாக இருந்தது’ - 12ஆம் வகுப்பு மாணவிகள் மகிழ்ச்சி