ஈரோடு: ஈரோட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை சாதியைக் கூறி தகாத வார்த்தைகளால் திட்டி, குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ள மாநகராட்சி ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண், எஸ்.பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிரந்தர தூய்மைப் பணியாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு அவ்வப்போது உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால், அவருக்கு உதவியாக அவரது மகள் பணியாற்றி வந்துள்ளார். தினமும் வீடுதோறும் சென்று குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞரை கொலை செய்த அண்ணன்.. திருப்பத்தூரில் நடந்த கொடூரம்!
இவர் பணிபுரியும் வார்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், அதிகாரிகள் ஆண், பெண் ஊழியர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்று உள்ளதாகத் தெரிகிறது. இந்த குழுவில் உள்ள தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் மற்றும் வாகனப் பிரிவு மேற்பார்வையாளர் யுவராஜ் ஆகிய இருவரும், சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் மற்றும் சில பெண்களை பாலியல் ரீதியாக பேசி குறுஞ்செய்தியை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், சம்பவத்தன்று மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையறிந்த மாதேஸ்வரன், பாதிக்கப்பட்ட பெண் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாதியின் பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியும், குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பெண், மாதேஸ்வரன் மற்றும் யுவராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் மனு அளித்துள்ளார்.