ஈரோடு: ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை வாய்க்கால்மேடு அடுத்துள்ள வேலாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர், விஜயகுமார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு இரண்டரை வயதில் ரோஹித் என்ற ஆண் குழுந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம்போல் விஜயகுமார் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் திவ்யா மற்றும் குழந்தை ரோஹித்தும் இருந்துள்ளனர்.
அப்போது வீட்டில் எலிகளை துரத்துவதற்காக பயன்படுத்தப்படும் எலி மருந்து பேஸ்ட்டை குழந்தை ரோஹித் சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த திவ்யா, அந்த மருந்தை குழந்தையிடமிருந்து வாங்கி அவரும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த நிலையில் இருந்த இருவரையும், அவரது உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, ரத்த பரிதோசனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாய் திவ்யா தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், குழந்தை ரோஹித் இன்று (டிச.12) உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.
அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்ற பிறகு தங்களிடம் நன்றாக பேசிவந்த குழந்தை, திடீரென இறந்ததற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியம்தான் காரணம் என குற்றம்சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக, மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிறையில் உள்ள மகனை ஜாமீனில் எடுக்க முயன்ற மாமியாரை வெட்டிக் கொன்ற மருமகள் கைது!