ஈரோடு: தூத்துக்குடியிலிருந்து பாரம் ஏற்றிய லாரி ஒன்று, கர்நாடக மாநிலம்ம் குஷால்நகர் செல்வதற்காக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த மனு குமார் ஓட்டிய நிலையில், அவருடன் கிளீனர் கமல் இருந்துள்ளார்.
மழையின் காரணமாக விபத்து
இன்று (ஜூலை.18) காலை முதல் ஆசனூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் சாலையில் மழைநீர் லேசாக ஓடியது. இந்நிலையில் ஆசனூர் அருகே நிலக்கரி பாரம் ஏற்றிச் சென்ற லாரி, சாலை வளைவில் திரும்பும்போது மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
காவல் துறை அறிவுறுத்தல்
இதுகுறித்து தகவலறிந்த ஆசனூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் சிக்கிய ஓட்டுநர், கிளீனர் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்மழை பெய்து வருவதால் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலும், ஆசனூர் பகுதியிலும் வாகனங்களை மித வேகத்தில் இயக்குமாறு வாகன ஓட்டிகளிடம் காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!'