ஈரோடு: தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத் தளபதியான மாவீரன் பொல்லான் 255-வது பிறந்தநாள் விழா, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்துள்ள ஜெயராமபுரத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பொல்லான் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாவீரன் பொல்லானின் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய தலைமுறையினர் அறிந்திடும் வகையில், சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக 1.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிகள் நடைபெறுவதற்கான முழு திட்டம் தயார் செய்தவுடன், தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். மாவீரன் பொல்லானின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவரின் சொந்த ஊரான ஜெயராமபுரத்திலேயே சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட வேண்டும் என அவரது வாரிசுதாரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆகவே, இந்த கோரிக்கையை ஏற்று, அவரின் சொந்த ஊரான ஜெயராமபுரத்திலேயே சுமார் 91 சென்ட் இடத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவீரன் பொல்லானின் வாரிசுதாரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் உள்பட வரலாற்று ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஐஜேகே மூன்று இடங்களில் போட்டி - பாரிவேந்தர் உறுதி