ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதி வழியாக, திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் கடந்த 10ஆம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இதனால், காலை 6 மணிக்கு பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச்சாவடி திறக்கும் வரை வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன. வாகனப்போக்குவரத்து தொடங்கும் வரை வாகன ஓட்டிகள் அங்கேயே காத்திருக்கின்றனர். அப்போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆண் யானையை வாகன ஓட்டிகள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த நபர் யானை அருகே சென்று ஏதோ பேசியபடி படுத்துக்கொண்டார். மீண்டும் எழுந்தபோது யானை பிளிறுயபடி தாக்க வந்தது. அங்கிருந்த வாகன ஓட்டிகள், அந்த நபரை ஓடிவருமாறு சப்தம் போட்டனர். ஆனால், அந்நபர் அங்கேயே நகராமல் நின்றபடி யானையைப் பார்த்து 'போ போ' என்றார்.
அதைப் பார்த்த யானை பின்னோக்கி நடந்தபடி காட்டுக்குள் சென்றது. யானை அவரைத் தாக்காமல் காட்டுக்குள் சென்ற இந்தக் காட்சிகளை வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை தொந்தரவு செய்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கர்நாடகத்தைச சேர்ந்தவர் என்பதும்; மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு- காருக்குள் இருந்த காவலரை வெளுத்து வாங்கிய கணவர்......