ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் பலரும் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் 85 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளில் அறிவிக்கப்படாத திட்டங்களையும் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறினார்.
மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதில் எந்தவித குளறுபடியும் இல்லை. தமிழ்நாட்டில் இரண்டரை கோடி மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 12 லட்சம் இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
விசைத்தறிக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டு இருக்கிறது. விசைத்தறிக்கு உயர்த்தபட்ட மின் கட்டணம் குறித்து முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக மனு அளித்து இருக்கிறது. இலவச மின்சாரம் அறிவிப்பு வெளியிடுவதில் சிக்கல் இருந்தால் தேர்தல் முடிந்தவுடன் வெளியிடப்படும்" இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம்!