ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராஜா மற்றும் அவரது நண்பர்களான சரத்குமார், ஸ்ரீதர், தமிழ்செல்வன், சுப்பிரமணி, பரணிதரன் ஆகிய ஆறு பேரிடமிருந்து கவுந்தப்பாடி சூரியம்பாளையத்தைச் சேர்ந்த சாமுவேல் சுரேன் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.38 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால், வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பித்தர மறுத்தும் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது குறித்து சிவராஜா தனது நண்பர்களுடன் கோபிசெட்டிபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பணத்தை வாங்கிய சாமுவேல் சுரேனிடம், பணத்தை திருப்பித்தருமாறு கேட்டபோது பணத்தை திருப்பித்தர முடியாது. இது தொடர்பாக என்னிடம் பேசினால் உங்களை கூலிப்படை வைத்துக் கொன்று விடுவேன் என்றும் காவல்துறைக்கு பணத்தை கொடுத்து சரி செய்துவிடுவேன் எனவும் கொலை மிரட்டல்விடுக்கிறார்.
எங்களிடம் வாங்கிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார். ஆனால் நாங்கள் பணத்தை இழந்து பெரும் கஷ்டத்தை அனுபவித்துவருகிறோம். சாமுவேல் சுரேனிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தருவது மட்டுமின்றி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.