சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கேர்மாளம், பூதாளபுரம், மாவள்ளம், தேவர்நந்தம், அட்டப்பாடி, புதுக்காடு, கோட்டாடை, குளியாடா, குரிமந்தை, ஆசனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாக்காச்சோளம் பயிரிடப்பட்டது.
மானாவாரி சாகுபடியான மக்காச்சோளம் 3 மாதப் பயிர் என்பதால் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டனர். தற்போது மக்காச்சோளப்பயிரில் கதிர் முதிர்ந்து அறுவடை செய்யும் பணி நடைபெற்று முடிந்தது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளம் களத்தில் உலர வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
சில நாள்களாக பெய்த மழையால் களத்தில் உலர வைக்கப்பட்ட மக்காச்சோளம் முழுவதும் மழையில் நனைந்து முற்றிலும் முளைப்பு விட தொடங்கியது. இதனால் களத்தில் போட்ட விவசாயிகளின் 500 டன் மக்காச்சோளம் சேதமடைந்ததால் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் 1 ஏக்கரில் பயிரிட்ட மக்காச்சோளத்தின் உற்பத்தி விலை ரூ. 12 ஆயிரம் என்றும், தற்போது மழையால் நனைந்து நாசமானதால் அனைத்தும் வீணாக போனதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது பயிர்க்காப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் பொங்கல் விழாவை கொண்டாட முடியாமல் சோகத்தில் உள்ளனர்.