சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் ஏராளமான யானை, சிறுத்தை, புலிகள் உள்ளன.
தமிழ்நாடு - கர்நாடக மாநிலத்தின் முக்கிய வழித்தடமான திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்நிலையில் இன்று (ஜுலை 1) திம்பத்தில் இருந்து ஆசனூர் செல்லும் சரிவான பாதையில் வனத்துறை ஊழியர் குடியிருப்பில் இருந்து எதிர்புறமாக சாலையைக் கடந்த 3 வயதுள்ள பெண் சிறுத்தை அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவயிடத்திலேயே பலியானது.
இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலைக் கைப்பற்றி, ஆய்வு செய்ததில் சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து திம்பம் பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து, சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழந்தபோது, அவ்வழியாக சென்ற வாகனங்களின் பதிவு எண்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
வாகனத்தில் அடிபட்டு இறந்த சிறுத்தையின் உடலை தலமலை வனத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.