ஈரோடு : முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் தற்போது போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து நேற்று 907 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர் வரத்து 2294 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.36 அடியாகவும், நீர் இருப்பு 16.97 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க : திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் - தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு!